சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அம்சாதோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வினோத். லாரி டிரைவரான இவருடைய மனைவி மதுமதி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை மதுமதி திருவொற்றியூர் கிராம தெரு சோமசுந்தரம் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த வழியாக ஓடி வந்த எருமை மாடு அவரை தனது கொம்பால் முட்டி தூக்கி ஒரு சுழட்டு சுழற்றியது.

அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் எருமை மாட்டை விரட்டினர். அப்போது மதுமதி அணிந்து இருந்த ஆடை எருமை மாட்டின் கொம்பில் சிக்கியதால் அவரை சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சாலையில் இழுத்தபடி எருமை மாடு ஓடியது. பிறகு மாட்டின் கொம்பில் சிக்கிய மது மதியை பத்திரமாக மீட்டனர். இதனால் மதுமதியின் உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 20 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.