கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சடைய கவுண்டனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மணிகண்ட பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை பயணிகளை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டு பொள்ளாச்சி திருப்பூர் சாலை கரப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அந்த சாலையை பழுது பார்ப்பதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் ஜல்லிக்கற்களை கொட்டி வைத்துள்ளனர்.

அந்த வழியாக சென்ற மணிகண்ட பூபதியின் ஆட்டோ எதிர்பாராதவிதமாக ஜல்லிக்கற்கள் மீது ஏறி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்ட பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மணிகண்ட பூபதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியம் காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டி ஆட்டோ ஓட்டுநர்களும் மணிகண்ட பூபதியின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.