இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், லால், பசுபதி, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்த இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

கடந்த 17ம் தேதி வெளியான இந்த படம், உலகளவில் 4 நாட்களில் ரூ.18 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலியின் ராம் சினிமாஸ் திரையரங்கில் ‘பைசன்’ படம் திரையிடப்பட்ட போது, இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம், நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ரெஜிஷா விஜயன் ஆகியோர் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர்.

 

படம் முடிந்தபின் ரசிகர்களுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்துரையாடியபோது, சில இளைஞர்கள் கூச்சல் போட்டபடியும் உற்சாகமாக நடந்து கொண்டதையும் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், சற்று கோபமாக, “சாராயம் குடித்தது மாதிரி ஆடாதீர்கள். நான் உங்களுக்கு சாராயம் கொடுக்கவில்லை, புத்தகத்தைத் தான் கொடுத்தேன். என் படத்தை புத்தகமாகப் பாருங்கள்.

உங்கள்மீது எனக்கு அக்கறை இருக்கிறது. அதுபோல நீங்களும் பிறரை நேசித்து, யாரையும் துன்புறுத்தாத வாழ்க்கை வாழுங்கள்,” என அறிவுரை கூறினார்.

இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மாரி செல்வராஜின் அணுகுமுறையை பாராட்டி, அவரது சமூகப் பொறுப்புணர்வை புகழ்ந்து வருகின்றனர். மேலும் முன்னதாகவே தென் மாவட்டங்களில் பதற்றத்தை குறைப்பதற்காக தான் இது போன்ற படங்களை இயக்கி வருகிறேன் என மாரி செல்வராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.