தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் புகழ்பெற்ற பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த கோவிலில் குட முழுக்கு விழா நடைபெற்றது. நேற்று மதியம் யாரோ கோவிலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டதால் அருகே இருக்கும் வயலில் வேலை பார்த்த முருகனும் அவரது பேரனும் கோவிலுக்கு விரைந்து சென்றனர். அப்போது மூன்று பேர் கோவில் பூட்டை உடைத்துக் கொண்டிருந்ததை கண்டனர். அவர்கள் திருடன் திருடன் என சத்தம் போட்டனர்.

இதனால் கோபமடைந்த மூன்று பேரும் முருகன் மற்றும் அவரது பேரனை தள்ளிவிட்டு தப்பி ஓடினர். இதற்கிடையே முருகனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருட முயன்ற ஒரு வாலிபரை மட்டும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை நடத்தியதில், அவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரைச் சேர்ந்த அரவிந்த் என்பதும், அவர் கோவில் சிலையை திருட முயன்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அரவிந்தை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.