உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில் மெஹ்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். டிசம்பர் 22-ஆம் தேதி திருமணத்திற்கு முந்தைய விழாவின் போது மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகன் குடும்பத்திற்கு இனிப்புகள் வழங்கி வரவேற்று உணவு பரிமாறி உள்ளனர். அப்போது மாப்பிள்ளையின் உறவினர் ஒருவருக்கு சாப்பாடு தாமதமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த உறவினர் திருமண விழாவில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் மணமகனின் குடும்பத்தினரை குற்றம் சாட்டி மணப்பெண்ணின் உறவினர்கள் பாதியிலேயே வெளியேறினர். அதன் பிறகு இரவு நேரம் மாப்பிள்ளை காணாமல் போய்விட்டார். சிறிது நேரம் கழித்து மாப்பிள்ளை உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து மண்டபத்திற்கு வந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மணமகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட 1.5 லட்சம் உட்பட 7 லட்சம் நிதி இழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மணமகன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.