மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் நேற்று  இனிதே நிறைவடைந்தது. இவ்விழாவில் நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மற்றும் மத மோதல்களைத் தடுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, கடந்த 2-ஆம் தேதி திருச்சியில் இந்த ‘சமத்துவ நடைபயணத்தை’ வைகோ தொடங்கினார். இதனைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு மாவட்டங்களைக் கடந்து வந்த இந்த நடைபயணம், நேற்று  மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது நடைபயணத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.

இந்த நிறைவு விழாவில் துரை வைகோ எம்.பி., மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், பூமிநாதன் எம்.எல்.ஏ., தளபதி எம்.எல்.ஏ., நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து மற்றும் ம.தி.மு.க.வின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் சத்யராஜ் பேசுகையில் தெரிவித்ததாவது “சாதாரண மனிதர்கள் வியந்து பார்க்கும் மாமனிதராக வைகோ திகழ்கிறார். தமிழக மக்களுக்காக இதுவரை 6 ஆயிரம் கி.மீ. தூரம் நடந்துள்ளார். திரையில் தோன்றும் நிழல் ஹீரோக்களுக்கு மத்தியில், மக்களின் பிரச்சினைகளுக்காகக் களத்தில் நிற்கும் நிஜ ஹீரோ வைகோ.

தமிழகத்தில் சமூகநீதி ஆட்சி சரியான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலகிற்கே முன்மாதிரியாகத் தமிழகம் திகழ இந்த ஆட்சி தொடர வேண்டும். தற்போதைய ஆட்சியில் சில குறைகள் இருந்தாலும், அவை நிச்சயம் சரி செய்யப்படும்” என்று அவர் பேசினார். மேலும் இந்த நடைபயண நிறைவு விழாவையொட்டி மதுரை மாநகர் முழுவதும் ம.தி.மு.க.வினர் உற்சாகமாகக் காணப்பட்டனர்.