தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகைகள் விற்பனை செய்யப்பட மாட்டாது எனப் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி எனத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது  சமீபகாலமாகச் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றுடன் கூடிய செய்தி ஒன்று வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், “பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்யப்பட மாட்டாது என நகை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தியைப் பார்த்த பலரும், தமிழகத்திலும் இது போன்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக எண்ணிப் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாகத் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான ‘தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்தச் செய்தியில் இடம் குறிப்பிடப்படாததால், அது தமிழ்நாட்டில் நடந்ததாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மையில், இந்த அறிவிப்பு உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் எடுக்கப்பட்ட முடிவாகும். இது தொடர்பான செய்திகள் முன்னரே தேசிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் எந்தவொரு இடத்திலும் இது போன்ற தடையோ அல்லது கட்டுப்பாடோ விதிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் உண்மைத்தன்மை அறியாமல் இத்தகைய போலிச் செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.