மருத்துவக் கோளாறு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயைக் கவனித்துக்கொள்ள விடுப்பு கோரிய மூத்த பெண் ஊழியர் ஒருவரிடம், தனியார் வங்கி மேலாளர் மிகக் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“உங்கள் தாயார் குணமடையவில்லை என்றால், அவரை முதியோர் இல்லத்திலோ அல்லது காப்பகத்திலோ சேர்த்துவிட்டு அலுவலகத்திற்கு வாருங்கள்” என்று அந்த மேலாளர் நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது.பல ஆண்டுகள் அந்த நிறுவனத்திற்காக உழைத்த அந்தப் பெண் ஊழியருக்கு, மனிதாபிமானமற்ற முறையில்வழங்கப்பட்ட இந்த பதிலால் அவர் மனமுடைந்து போனார்.
இறுதியில், வேலையா அல்லது குடும்பமா என்ற இக்கட்டான நிலையில், தனது தாயின் நலனே முக்கியம் எனக் கருதி அவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கும், நெருக்கடி காலங்களுக்கும் மதிப்பளிக்கப்படுவதில்லை என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
‘ரெடிட்’ (Reddit) தளத்தில் பகிரப்பட்ட இந்தப் பதிவு, இணையவாசிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள், ஊழியர்களை வெறும் இயந்திரங்களாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றும், இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த பணிச் சூழலுக்கு எதிராகக் கடுமையான சட்டப் பாதுகாப்பு வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மனிதநேயமற்ற இந்த அணுகுமுறை,நாட்டின் கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து ஒரு புதிய விவாதத்தைத் தற்போது கிளப்பியுள்ளது.
