ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக மனிஷ் பாண்டே மற்றும் சர்ஃபராஸ் கானை டெல்லி கேப்பிடல்ஸ் விடுவித்துள்ளது.

2023 உலகக் கோப்பைக்குப் பிறகு, அடுத்ததாக 2024 ஐபிஎல் நெருங்கி வருகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரவிருக்கும் சீசனுக்கான மினி ஏலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. ஆம்  டெல்லி அணி 2 பேட்ஸ்மேன்களை நீக்கியுள்ளது, அதில் மணீஷ் பாண்டே மற்றும் சர்பராஸ் கான் பெயர்கள் அடங்கும். ஐபிஎல் 2023 இல் இரு வீரர்களாலும் அணியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.

சர்பராஸ் கானைப் பற்றி பேசினால், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் தொடர் சதங்கள் அடித்ததன் மூலம் பிசிசிஐயின் கதவுகளைத் தட்டினார். ஆனால் ஐபிஎல் 2023 இல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஆடிய ​​​​அவரால் தாக்கத்தை ஏற்படுத்த  முடியவில்லை. ஐபிஎல் 2023ல் டெல்லி அணிக்காக 4 போட்டிகளில் விளையாடிய சர்பராஸ் 53 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த மோசமான செயல்பாடு காரணமாக அவரை விடுவிக்க டெல்லி முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்ஃபராஸின் ஐபிஎல் வாழ்க்கை இதுவரை 50 போட்டிகளை கடந்துள்ளது. ஐபிஎல் 2024 இன் மினி ஏலத்தில் எந்த அணி அவரை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்..

மணீஷ் பாண்டேவும் ஏமாற்றம் :

சர்ஃபராஸ் கானைத் தவிர, மனிஷ் பாண்டேவும் 2023 ஐபிஎல் இல் தனது பேட்டிங்கில் ஏமாற்றமளித்தார். இருப்பினும், ஐபிஎல்லில் மனிஷ் பாண்டே தனது சதத்தின் மூலம் தனது திறமையை ஒரு காலத்தில் நிரூபித்தார். இதையடுத்து அவரை அணியில் சேர்க்க அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. ஆனால் தற்போது அவரது மோசமான ஆட்டத்தை கண்டு டெல்லி பாண்டேவை விடுவித்துள்ளது. அடுத்த மாதம் மினி ஏலம் நடைபெறவுள்ளது, இதில் எந்த அணி அவர் மீது நம்பிக்கை வைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஐபிஎல் 2023ல், மணீஷ் பாண்டே 9 இன்னிங்ஸ்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த 2 பேட்ஸ்மேன்களைத் தவிர, டெல்லி தரப்பில் இருந்து பிரித்வி ஷாவும் ஏமாற்றமளித்தார். 16வது சீசனில் டெல்லி அணி 7வது இடத்தில் இருந்தது. 2022 டிசம்பரில் ஒரு பயங்கரமான கார் விபத்தில் காயமடைந்த கேப்டன் ரிஷப் பந்த் 2024 ஐபிஎல்லுக்கு தயாராவாரா என்பதை அணி கவனிக்கிறது. இதனிடையே சென்னை அணி மனீஷ் பாண்டேவை எடுத்தால் எப்படி இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். ராயுடுவுக்கு பதில் மனீஷ் பாண்டேவை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் யாரும் நம்பிக்கை வைக்காமல் கழட்டி விடும் வீரர்களை சென்னை அணி நம்பி வாங்க, அந்த வீரர்கள் ஜொலிப்பதை நாம் ஏற்கனவே கடந்த சீசன்களில் பார்த்திருக்கிறோம். குறிப்பாக கடந்த சீசனில் ரஹானேவை சிஎஸ்கே எடுத்தது. இவரை ஏன் தான் எடுத்தார்கள் என அனைவரும் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் வாயையும் தனது பேட்டால் அடைத்திருப்பார். அதேபோல யாரும் எதிர்பார்க்காத சிவம் துபேவும் சிக்ஸர்களாக விளாசினார். மனிஷ் பாண்டேவை ஒருவேளை சென்னை அணி எடுத்தால், அவர் இங்கு வந்து தனது அதிரடியால் மிரட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..