மைனர் பெண்ணுடன் ‘சம்மதத்துடன்’ உடலுறவு கொண்டாலும் அது மன்னிக்கத்தக்க குற்றமாக கருதப்பட முடியாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் வலியுறுத்தியுள்ளது. மைனருக்கு எதிரான பாலியல் குற்றத்தில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து கூறிய தீர்ப்பில் இந்த கருத்து பதிவாகியுள்ளது.

நீதிபதி ராஜசேகர் மந்தா மற்றும் நீதிபதி அஜய் குமார் குப்தா அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை புதன்கிழமை வழங்கியது. தீர்ப்பு நகல் வியாழக்கிழமை பதிவேற்றப்பட்டது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 64 மற்றும் போக்சோச் சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது. இதற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர் மேல் முறையீடு செய்தார்.

அதன்படி, 2014 ஆம் ஆண்டு மைனர் பெண்ணுடன் குற்றவாளிக்கு ‘காதல் தொடர்பு’ இருந்துள்ளது. நவம்பர் 2016 இல், மைனரின் வயது 14 மட்டுமே இருந்தபோது அவர் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தொடர்ந்து உடலுறவை மேற்கொண்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

2017 இல் மைனர் கர்ப்பமாகியதும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது குடும்பமும் பெண்ணுக்கும் பிறக்காத குழந்தைக்கும் பொறுப்பேற்க மறுத்ததால், நர்கெல்டங்கா போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

டிஎன்ஏ அறிக்கைகள் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்புடையவரே என்பதை உறுதிப்படுத்தியதாக நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதிகள் மைனரின் வாக்குமூலம் நம்பகமானதெனில், இவ்வகை வழக்குகளில் கூடுதல் ஆதாரங்கள் தேவையில்லை என்ற சட்டக் கொள்கையை நினைவுபடுத்தியது.

மேலும் பாதிக்கப்பட்டவரின் வயதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் எந்த நிலையிலும் ஆட்சேபனை செய்யாததும், பிறப்புச் சான்றிதழ் தெளிவான சான்றாக இருந்ததும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதன் பிறகு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்வது. அதோடு மாநில சட்ட சேவை ஆணையம் 15 நாட்களில் ரூ.1,80,000 வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் ஜாமீனில் வெளியில் இருந்தால், உடனடியாக சரணடையவும், ஆயுள் தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.