நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 2024-ல் வெளியான ‘பிளாக்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மலையாள இயக்குனர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஜீவாவிற்கு ஒரு மாஸான கம்பேக் படமாக அமைந்துள்ளது. ஜனவரி இறுதியில் வெளியாக வேண்டிய இப்படம், எதிர்பாராத சூழலால் பொங்கலுக்கு முன்னதாகவே வெளியானது. ஒரு நல்ல ‘பீல் குட்’ மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு படமாக இது இருப்பதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பட்டிதொட்டியெங்கும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்திற்காக நடிகர் ஜீவா வாங்கிய சம்பளம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவர் இந்தப் படத்திற்காகத் தனிப்பட்ட முறையில் சம்பளம் வாங்காமல், படத்தின் லாபத்தில் ஒரு பங்கைப் பகிர்ந்து கொள்ளும் ‘Profit Sharing’ அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. படம் வெளியான மூன்றே நாட்களில் 11 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதால், ஜீவாவின் சம்பளம் எப்படியும் 5 கோடி ரூபாயைத் தாண்டும் எனத் திரையுலகினர் கணிக்கின்றனர். இருப்பினும், லாபத்தில் அவர் எத்தனை சதவீதம் பெறுகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்தத் திரைப்படத்தின் அசுரத்தனமான வசூல் ஜீவாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அவரது முந்தைய படங்களை விட இந்தப் படம் அதிக வசூல் செய்துள்ளதால், இனிவரும் காலங்களில் ஜீவாவின் சம்பளம் மற்றும் மார்க்கெட் மதிப்பு பல மடங்கு உயரும் என்பது உறுதியாகியுள்ளது. ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியின் மூலம், இந்த ஆண்டு பொங்கல் வின்னராக ஜீவா உருவெடுத்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகமாகப் பேசி வருகின்றனர்.
