திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன்(37). இவர் தன் 16 வயதில் இருந்து சமூகசேவையில் ஈடுபட்டு வருகிறார். அதாவது, ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல தரப்பை சேர்ந்தவர்கள் மரணமடைந்து விட்டால் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று பல நாட்கள் இருக்கும்.

அதை பெற யாரும் முன் வரமாட்டார்கள். அவ்வாறு பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ள உடல்களை காவல்துறையினர் அனுமதியுடன் பெற்று நல்லடக்கம் செய்து வருகிறார் மணிமாறன். சென்ற 21 வருடங்களாக தொய்வின்றி இப்பணியை அர்ப்பணிப்பு மனதுடன் செய்து வருகிறார். இவருடைய சேவையை பாராட்டி மத்திய-மாநில அரசுகளானது விருதுகள் வழங்கியுள்ளது.

மேலும் பல மாநில முதலமைச்சர்களின் பாராட்டு பெற்ற அவர், உலக சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம் போன்றவையும் பெற்றுள்ளார். இது குறித்து அறிந்த நடிகர் ரஜினி, மணிமாறன் சேவையை பாராட்டி அவர் தடையின்றி சேவை செய்யும் விதமாக தன் அறக்கட்டளை சார்பாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய ஊக்கம் அளித்துள்ளார் ரஜினி.