உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதோடு படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாமன்னன் படத்துக்கு இடைக்கால தடைவிதிக்க கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக அதன் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க நடிகைகள் ஆனந்தி, பாயல் மற்றும் யோகிபாபு போன்றோர் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் “ஏஞ்சல்” என்ற படத்தை தயாரித்து வருகிறேன். கடந்த 2018-ம் ஆண்டே இந்த படத்தின் சூட்டிங் தொடங்கி 80% நிறைவடைந்த நிலையில் ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருக்கிறார். இதை தன் கடைசி படம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக “ஏஞ்சல்” படத்தை முடிக்காமல் “மாமன்னன்” படத்தை வெளியிட அனுமதித்தால் அது தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒப்பந்தப்படி இன்னும் 8 தினங்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவுசெய்து தர வேண்டும். மேலும் ரூ.25 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் அதுவரையிலும் மாமன்னன் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இம்மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, இவ்வழக்கின் விசாரணையை 28-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதற்குள் இரண்டு பேரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.