2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி மக்கள் சந்திப்பு பயணத்தில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரப்புரை சனிக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விளக்கம் அளித்த விஜய், “மக்களின் வேலை மற்றும் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவே சனிக்கிழமைகள் மட்டும் பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்து, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், “எனது அரசியல் பயணம் மக்களுக்காகவே தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் களத்தில் இருப்பதே எனது நோக்கம்.
அதற்காக அவர்களின் அன்றாட வாழ்விற்கு தொந்தரவு ஏற்படுத்த விரும்பவில்லை” எனவும் விஜய் தெரிவித்தார். அவரது இந்த முடிவு, வேறு அரசியல் தலைவர்களிடமிருந்து வித்தியாசமான பார்வையைக் காட்டுவதாகவும், ஒழுக்கமிக்க அரசியல் அணுகுமுறையை பிரதிபலிப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
