சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு குழந்தை காவலுக்கான (Custody) வழக்கில், 13 வயது சிறுமி ஒருவர் அளித்த உருக்கமான வாக்குமூலம் அனைவரையும் கவர்ந்தது. பெற்றோரின் சண்டைக்கு மத்தியில் நீதிமன்றத்தில் பேசிய அந்த சிறுமி, “எனக்குத் தோன்றுகிறது, இந்த எல்லா மோதல்களுக்கும் நான்தான் காரணம் என்று,” என்று கவலையுடன் தன் உணர்வை வெளிப்படுத்தினார். வயதுக்கு மீறிய அந்த சிறுமியின் வார்த்தைகள், தன் பெற்றோரின் பிரிவினால் ஏற்படும் வேதனையையும், குடும்பச் சண்டைக்கு தான் ஒருவேளை காரணமாக இருக்கலாம் என்ற குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.
அவரது பேச்சு, வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி. அன்ஜாரியா (Justice NV Anjaria) அவர்களையே வியக்க வைத்தது. சிறுமி பேசியதைக் கேட்ட நீதிபதி என்.வி. அன்ஜாரியா, உடனடியாக அந்த சிறுமியைப் பாராட்டினார். “அவளுக்கு 13 வயதுதான் ஆகிறது… ஆனால் அவள் ஒரு 31 வயது பெண்ணைப் போல பேசியிருக்கிறாள். இவ்வளவு முதிர்ச்சியுடனும், உணர்வுப்பூர்வமாகவும் இருக்கிறாள்,” என்று கூறினார். மேலும், நீதிபதி, குழந்தையின் நலன் மற்றும் விருப்பங்களே மிக முக்கியம் என்றும், இந்த வழக்கில் முடிவெடுப்பதற்கு அதுவே வழிகாட்டியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த சிறுமியின் தைரியமும், பேச்சு முதிர்ச்சியும் பெற்றோர் மத்தியில் மட்டுமல்லாமல், நீதிமன்ற நடைமுறைகளிலும் குழந்தையின் குரலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த உணர்வுபூர்வமான நிகழ்வு, நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் சிந்திக்க வைத்தது.
