ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு, அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றைப் பார்வையிடுவதற்காகக் கரப்பான்பூச்சு ஜனதா கட்சி (சிஜேபி) தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சென்றிருந்தனர். கடந்த பல ஆண்டுகளாக மாட்டுத் தொழுவத்தில் செயல்பட்டு வரும் அந்தப் பள்ளியை ஆய்வு செய்ய கிராம மக்களே தங்களை அழைத்ததாகக் கூறி, சிஜேபி இணை நிறுவனர் அஷுதோஷ் ரங்கா தலைமையிலான குழுவினர் அங்குச் சென்றனர்.

ஆனால், கிராமத்திற்குள் நுழைந்த சிஜேபி குழுவினரை ஒரு கூட்டம் மறித்து, அவர்களை அவதூறாகப் பேசித் தாக்கியது. அந்த ஆர்வலர்களைக் “நக்சலைட்டுகள்”, “தேசவிரோதிகள்” மற்றும் “பாகிஸ்தானியர்கள்” எனக் கூறி முழக்கமிட்ட அக்கூட்டம், அவர்களைத் துரத்தியடித்தது. இந்தத் தாக்குதலில் சிஜேபி தொண்டர்களின் வாகனங்கள் நொறுக்கப்பட்டன; கைபேசிகள் உடைக்கப்பட்டன. பெண் ஒருவர் உட்பட பலர் காயமடைந்ததுடன், ஒருவருக்குக் கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு பாஜக குண்டர்களே காரணம் என்று சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது. வருகை குறித்துக் காவல்துறைக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்தும், உள்ளூர் பாஜக தலைவர் வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்துத் தாக்குதலை நடத்தியதாக அஷுதோஷ் ரங்கா கூறினார். அதேவேளையில், அங்கிருந்த சிலர் தங்களைக் கிராமவாசிகள் எனக் கூறிக்கொண்டு, சிஜேபி அமைப்பினர் தேசவிரோதிகள் என்றும், அவர்கள் தங்கள் கிராமத்திற்குள் வரக் கூடாது என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத்திலும் பெரும் புயலைக் கிளப்பியது. சட்டசபையில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்துக் கொண்டன. காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் டோடாசரா இந்த வன்முறைக்கு பாஜகவே முழுப் பொறுப்பு என்று குற்றம் சாட்டினார்.

VIDEO | Jaipur, Rajasthan: Cockroach Janata Party (CJP) co-convenor Ashutosh Ranka says, "We had gone to inspect the school in Rampura-Kanwarpura village. For the past several years, the school has been operating in a buffalo shed. We had gone for an inspection last year as well,… https://t.co/MqgiMSCt8R pic.twitter.com/pWxyPwsyyW

— Press Trust of India (@PTI_News) August 21, 2026

“>

இதற்குப் பதிலளித்துப் பேசிய ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ஜவஹர் சிங் பேடம், சிஜேபி என்ற பெயரின் போர்வையில் காங்கிரஸ்தான் பின்னணியில் இருந்து பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது என்று எதிர்க்குற்றம் சாட்டினார். இதனால் சட்டமன்றத்தில் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான காரசார விவாதம் ஏற்பட்டது.