நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் சோளக்காடு, செம்மேடு, செங்கரை போன்ற மூன்று பகுதிகளில் டாஸ்மாக் கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் சில பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த தேவனூர் நாடு ஊராட்சி பின்னம் பட்டியை சேர்ந்த மலைவாழ் பெண்கள் அனைவரும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது, தேவனூர் நாடு பின்னம் பட்டியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

நாங்கள் பேருந்து ஏறுவதற்காக வெண்டலபாடி பேருந்து நிறுத்தம் செல்ல வேண்டும். அங்கு உள்ள சந்து கடையில் மது பிரியர்கள் குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக செல்பவர்களை தகாத வார்த்தையால் திட்டுகின்றனர். இதன் காரணமாக அந்த வழியே பெண்கள், கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் பெண்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த சந்துக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.