அதிமுகவில் அதிகார மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்ற ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வரும் நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று கூறிவரும் சசிகலா மற்றொருபுறம் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து அதிமுகவை இணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என்று சசிகலா அண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்த நிலையில், அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேனும் சசிகலாவின் பேச்சை விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில் அவ்விழாவில் தமிழ் மகன் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவுக்குப் பிறகு தமிழ் மகன் உசேன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நான்கரை வருடங்கள் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்றது. இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நியமிப்பது என்பது குறித்து இடைக்கால பொதுச் செயலாளர் முடிவு செய்வார். அதன் பிறகு சசிகலா அதிமுக தலைமையை சந்தித்து பேச இருப்பதாக கேலிக்கூத்தாக சொல்லி வருகிறார். அது நடைபெறுவதற்கு நிச்சயமாக எந்த வாய்ப்பும் கிடையாது. மேலும் தலைமைக் கழகத்தை சூறையாடியவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதை தொண்டர்களை விரும்ப மாட்டார்கள் என்று ஓபிஎஸ் குறித்தும் கூறினார்.