தமிழகத்தில் திமுக அரசால் செயல்படுத்தப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நின்றால் விளம்பரம். நடந்தால் விளம்பரம். சைக்கிள் ஓட்டினால் விளம்பரம் என்று விளம்பர மோகத்துடன் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து பின்புற வாசல் வழியே ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்து மற்றும் மாத்திரைகள் தரப்படும் என்று இந்த திட்டத்தை தொடங்கும் போது தெரிவித்தது. ஆனால் அந்த திட்டத்தில் தற்போது பல குளறுபடிகள் வளர்ந்துள்ளதோடு ஒரே ஒருமுறை மட்டும்தான் பரிசோதனை செய்து மருந்து மாத்திரை தந்ததாக பயனாளிகள் கூறுகிறார்கள்.

எப்போதும் கடந்த ஆட்சியை குறை சொல்லிக் கொண்டிருக்கும் இந்த விடியா தி.மு.க அரசு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதால் அந்த பயனாளிகளின் புள்ளி விவரங்களை வெளியிடுவதோடு மருந்து பெட்டகங்கள் வழங்குவதற்கு அரசின் சார்பாக எவ்வளவு செலவு செய்துள்ளது என்று விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவரங்களை விளம்பர அரசின் முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.