திருவாரூரில் விசிக கட்சியின் பிரமுகரான கவியரசன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான நிதி உதவியை தொல் திருமாவளவன் வழங்கிவிட்டு மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக இன்று வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் இருக்கிறது. இன்று அதிமுக மதவாத சக்திகளின் பிடியில் சிக்கிக் கொண்டு 3 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் இன்று அதிமுக ஒற்றுமையாக இருந்திருக்கும். ஆனால் பாஜக அதிமுகவை பிளவுபடுத்தி இரண்டாக்கி அதிமுக தலைமையிலான அணியை இந்த இடைத்தேர்தலில் காணாமல் போக செய்துவிட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்று சொன்னது தற்போது திமுக கூட்டணிக்கு உண்மையாகி இருக்கிறது. அதிமுகவில் தற்போது உள்ள நிலைமைக்கு பாஜக தான் காரணம். இதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விசிக கட்சி எப்போதும் திமுக கூட்டணியில் தான் இருக்கும். மதவாத சக்தியான பாஜக இங்கு காலூன்ற நினைப்பது நல்லது கிடையாது. எனவே அதிமுக தன்னை வலுப்படுத்திக் கொண்டால்தான் பாஜகவை விரட்டி அடிக்க முடியும் என்று கூறினார்.