திருவாரூர் தெற்கு வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கவியரசன் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த கொலைக்கு பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கட்சி சார்பில் கவியரசன் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான காசோலையை தொல். திருமாவளவன் வழங்கினார். அதன் பிறகு திருமாவளவன் மேடையில் பேசினார். அவர் பேசியதாவது. பாஜக ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்டி படுகொலைகளை செய்து வருகிறது. குற்றவாளிகளை கட்சியில் சேர்ப்பதற்கு அஞ்சாத பாஜக கட்சியில் உள்ள குற்றவாளிகளை திமுக கண்காணிக்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும்.

பாஜகவுக்கு எதிராக இந்திய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. அதன்பிறகு கூட்டணி கட்சிக்காரர்களுக்கு விசிகாவின் ஓட்டு என்றால் இனிக்கிறது. அதுவே எங்கள் கொடி என்றால் கசக்கிறது. பல இடங்களில் கூட்டணி கட்சியினரே விடுதலை சிறுத்தைகள் கொடியினை ஏற்ற விடுவதில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றார். மேலும் பாஜகவை விமர்சித்தும் திமுகவை உயர்த்தியும் பேசிய திருமாவளவன் திடீரென எங்கள் ஓட்டு என்றால் இனிக்கிறது கொடி என்றால் கசக்கிறது என மறைமுகமாக திமுக கூட்டணியை தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.