திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது. இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அவரது வருகையை ஒட்டி திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது. கூட்டத்தில் பேசிய முதல்வர், “வலதுசாரிகளின் ஆக்ரோஷத்துக்கு பதிலடி நமது கொள்கைகள் தான்” என்று வலியுறுத்தியதுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குச் சவால் விடுத்தார். “அமித்ஷா அவர்களே! உங்களுடைய சங்கி படையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது; தமிழ்நாட்டை வெல்ல முடியாது” என்று முழங்கிய அவர், அன்பாக வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடி பணிய மாட்டோம்; எதிர்த்து வென்று காட்டுவோம் என்று தெரிவித்தார்.
மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற இளைஞர் அணியினர் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில், “திராவிட மாடலின் 2.0-வுக்கான பரப்புரை திருவண்ணாமலையில் தொடங்கியது. எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல் கொடுக்கும் கழகத்தின் இளம் கொள்கைப் பட்டாளமே புறப்படு!” என்று பதிவிட்டுள்ளார்.
