கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் மாசிலாமணியும் அவரது மனைவியும் அவர்களின் சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாசிலாமணி அவரது சகோதரி கிருஷ்ணகுமாரி வீட்டிற்கு மனைவி ஷோபனாவை பேருந்தில் அனுப்பிவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாசிலாமணி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் மூன்று மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தனர்.

உடனடியாக மாசிலாமணி சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த கும்பல் ஆயுதத்தினால் மாசிலாமணி தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது மூன்று பேரில் ஒருவரை மாசிலாமணி கீழே தள்ளி பிடித்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மாசிலாமணிக்கு உதவினர்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்ட அந்த நபரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிந்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.