கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மேலே படிக்கப்பட்ட அரசாணைகளில் மாண்புமிகு அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து அந்தந்த மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசர கால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2. மேற்படி வருவாய் மாவட்ட வாரியான பொறுப்பு அமைச்சர்களில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு திரு சு. முத்துசாமி மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களை நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது..

3. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.