சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இந்திய தொடக்க வீரர் ஷுப்மன் கில் பெற்றார்..

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான  மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் அதிரடியாக சதம் (126) விளாசினார். மேலும் ராகுல் திரிபாதி (22 பந்துகளில் 44; 4 பவுண்டரி, 3 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (13 பந்துகளில் 24; பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்டியா (17 பந்துகளில் 30; 4 பவுண்டரி, சிக்சர்) ஆகியோரின் சிறப்பான இன்னிங்சுசன் கில்லின் அதிரடி சதம் உறுதுணையாக இருந்தது.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. இஷான் கிஷான் (1) மட்டும் ஏமாற்றம் அளித்தார். கிவிஸ் பந்துவீச்சாளர்களில் பிரேஸ்வெல், டிக்னர், சோதி, டேரில் மிட்செல் ஆகியோர் ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் 235 ரன்களை இலக்காகக் கொண்டு ஸ்கோரைத் துரத்த நியூசிலாந்து அணி மிகவும் மோசமான தொடக்கத்தையே பெற்றது. முதல் ஓவரில் பில் ஆலனும்(3), இரண்டாவது ஓவரில் கான்வேயும்(1) பெவிலியன் திரும்பினர்.

அதன்பின்  பேட்டிங் செய்ததில் எந்த வீரரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.. முழு அணியிலும் 2வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்ட முடிந்தது, அதிகபட்சமாக டேரில் மிட்செல் 35 ரன்களும், சான்ட்னர் 13 ரன்களுடனும் எடுத்தனர். நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. இதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்று தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது..

இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் டைனமிட் ஷுப்மான் கில் (63 பந்துகளில் 126 நாட் அவுட்; 12 பவுண்டரி, 7 சிக்சர்) அதிரடியாக சதம் விளாசினார். இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட் ஆன கில், இந்தப் போட்டியில்  ஆக்ரோஷமாக ஆடினார். அவர் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் தனது முதல்குறுகிய வடிவிலான டி20 சதத்தை பதிவு செய்தார்.

கில் 187.04 ஸ்டிரைக் ரேட்டில் சதம் அடித்தார் என்றால், அவரது  அதிரடி எப்படி இருந்திருக்கும்.. சதம் அடித்த பிறகும் சற்றும் குறையாமல் இருந்த கில் சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். சதம் அடித்த பிறகு, கில் கூட்டத்திற்கு சல்யூட் அடித்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் மற்றும் மற்றொரு சதத்தை அடித்த கில், டி20 போட்டிகளிலும் தனது சதங்களை தொடர்ந்தார்.

இப்போட்டியில் சுப்மன் கில் சதம் விளாசியதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது கில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 122 ரன்கள் அடித்திருந்தார். இதுதான் ஒரு இந்திய அணி வீரர் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக எடுத்த ரன்னாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் கில். அதேபோல இந்த பட்டியலில் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக 118 ரன்கள் எடுத்து 3வது இடத்தில் இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இந்திய தொடக்க வீரர் ஷுப்மன் கில் பெற்றார்.. அதாவது 54 பந்துகளில் தனது சதத்தை எட்டிய கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் கே.எல்.ராகுலை இணைத்து, ஆட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் (டி20, ஒருநாள், டெஸ்ட்) சதம் அடித்த 5வது இந்தியர் ஆனார். 

தனது முதல் டி20ஐ சதத்துடன், சுப்மன் 23 வயது 146 நாட்களில் அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த சாதனையை படைத்தார்.  இதன் மூலம், டி20யில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற  சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட்டில் வரலாறு  படைத்தார் கில். சுப்மன் கில் 23 ஆண்டுகள் 146 நாட்களில் மைல்கல்லை எட்டினார், 2010 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 23 வயது 156 நாட்களில் 101 ரன்கள் எடுத்த ரெய்னாவை விட 10 நாட்கள் குறைவாக இருந்தார்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த 7ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கில்.. ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல் ராகுல், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோரின் வரிசையில் இணைந்துள்ளார் கில்.