பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தின் போது, பவுண்டரி லைனுக்கு  அருகில் நின்ற ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்கை  விராட் கோலி ரசிகர்கள் மீண்டும் கிண்டல் செய்தனர்.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தர்மசாலாவில் நேற்று காலை 10:30 மணி முதல் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் துவக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். மேலும் இப்ராஹிம் சத்ரான் மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஆகியோர் தலா 22 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் 2விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் தஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 34.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் 57 ரன்களும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 59 ரன்களும் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர். ஆப்கான் அணியில் பரூக்கி, நவீன் உல் ஹக், ஒமர்சாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்..

இந்த ஆட்டத்தின் போது, பவுண்டரி லைனுக்கு  அருகில் நின்ற ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்கை  விராட் கோலி ரசிகர்கள் மீண்டும் கோலி, கோலி என கத்தி கிண்டல் செய்தனர். ஏனெனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி)க்காக விளையாடும் நவீன், கடந்த சீசனில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஜாம்பவான் விராட் கோலியுடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நவீன் உல் ஹக்.

ஐபிஎல் போட்டியின் போது இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டனர் மற்றும் நடத்தை விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் எல்எஸ்ஜியின் ஆலோசகரான கவுதம் கம்பீரும் தலையிட்டு கோலியிடம் சண்டைக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். களத்தில் ஏற்பட்ட சண்டை, இருவரும் இன்ஸ்டாகிராம் வரை தொடர்ந்தது. இதனால் கோலி ரசிகர்கள் அவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதனால் தான் ​​தர்மசாலாவில் உள்ள கோலி ரசிகர்கள், சமூக ஊடகங்களில் உலகில் அதிகம் பின்தொடரும் கிரிக்கெட் வீரராக இருக்கும் கோலியின் சார்பாக நவீனை கேலி செய்ய முயன்றனர்.

நான் அதை அனுபவிக்கிறேன் :

ஒரு பழைய நேர்காணலில், நவீன்-உல்-ஹக், ‘கோலி, கோலி,’ கோஷங்கள் தன்னை பாதிக்காது என்று பகிர்ந்து கொண்டார். அதற்கு பதிலாக அவருக்கு கிரிக்கெட் மைதானத்தில் ஆர்வத்தை தூண்ட உதவுங்கள் என்றார். நவீன் கூறியதாவது, “நான் அதை ரசிக்கிறேன். மைதானத்தில் இருக்கும் அனைவரும் அவருடைய பெயரையோ அல்லது வேறு எந்த வீரரின் பெயரையோ உச்சரிப்பது எனக்குப் பிடிக்கும். இது எனது அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தருகிறது. நான் வெளிப்புற சத்தத்தில் கவனம் செலுத்தவில்லை. எனது சொந்த கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” என்றார்.

 நவீன் உல் ஹக் ஓய்வு :

உலகக் கோப்பையின் முடிவில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் அறிவித்துள்ளார். ஆனாலும் டி20யில் தனது நாட்டுக்காக ஆடுவதாக தெரிவித்தார். அக்டோபர் 11 ஆம் தேதி புதன்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதுகிறது. இந்தப்போட்டியில் கோலிக்கு எதிராக நவீன்-உல்-ஹக் விளையாடுவார். ஐபிஎல் போட்டிக்குப் பிறகு நவீன் மற்றும் கோலி இடையேயான முதல் மோதலாக இது இருக்கும். இந்த போட்டியில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..