கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தானுமாலய சுவாமி கோயில் மார்கழி தேரோட்ட விழாவின் போது, சில அமைப்பினர் ‘சாவர்க்கர் வாழ்க’ என முழக்கமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திருத்தலத்தில், மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரின் பெயரை முழங்குவது பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் செயல் என்று சாடியுள்ளார்.
தேச ஒற்றுமைக்காகவும், சாதி ஒழிப்புக்காகவும் பாடுபட்ட மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கும்பலைச் சேர்ந்தவரைப் போற்றி முழக்கமிடுவது, தமிழகத்தின் பன்மைத்துவப் பண்பாட்டிற்கு எதிரானது என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
காந்தி கொ*ல வழக்கில் தொடர்புடைய சாவர்க்கருக்கு முழக்கங்களை எழுப்பி கோயில் விழாவில் அரசியல் பிரச்சினையை தூண்டியதாக பாஜக மீது அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு…!#MinisterManoThangaraj #BJP #Political #Templefunctionissue #TamilNews #Newstamil #NewsTamil24x7 pic.twitter.com/8oeCuRAFQE
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) January 3, 2026
“>
கோயில் திருவிழாக்களைத் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் இத்தகைய போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ள அமைச்சர், ஆன்மீகத் தலங்களில் நச்சுக்கருத்துகளைப் புகுத்தும் முயற்சியைத் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய தேசத்தின் மாண்பைச் சிதைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், வழிபாட்டுத் தலங்களில் மதவாத அரசியல் புகுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
