சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தார். அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை. இந்த நிலையில் அத்தை சிறுமியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் கடந்த எட்டாம் தேதி சிறுமி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அவரது அத்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பம்மலில் வைத்து சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினார். அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஒரு கால் டாக்ஸி டிரைவரிடம் சிறுமி உதவி கேட்டுள்ளார்.

அவர் சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யராஜ் என்பது தெரியவந்தது. அவர் தனது நண்பரும், மற்றொரு ஓட்டுனருமான பரமசிவன் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். இருவரும் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று சிறுமியை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பம்மலில் இறக்கி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாக்யராஜ், பரமசிவன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.