தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு தனது அக்னிப் பரீட்சையான தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பெரம்பூரைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கொளத்தூர் வந்த விஜயைக் காண பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டனர். இதனால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது. கூட்ட நெரிசல் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இதனை ஏற்று, காவல்துறை அனுமதித்த இடத்திற்கு சுமார் 100 மீட்டர் முன்பாகவே விஜய் தனது வாகனத்தை நிறுத்தினார். பாதுகாப்பு கருதி, வெறும் 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக்கொண்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

திட்டமிட்டபடி பெரம்பூர், கொளத்தூரைத் தொடர்ந்து விஜய் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கொளத்தூரில் ஏற்பட்ட பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக வில்லிவாக்கம் பிரச்சாரம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தவெக மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“கொளத்தூரில் தலைவர் விஜய்க்குச் சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸ் தரப்பில் போதிய ஏற்பாடுகள் இல்லாததால் தொண்டர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. எனவே, இன்று நடைபெறவிருந்த வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்படுகிறது. தலைவர் விஜய் வேறொரு நாளில் வில்லிவாக்கத்தில் தனியாகப் பிரச்சாரம் மேற்கொள்வார் என்றார்.

மேலும் பாதுகாப்பு காரணங்களால் விஜய்யின் முதல் நாள் பிரச்சாரப் பயணம் பாதியிலேயே முடிவுக்கு வந்தது அக்கட்சியினரிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அவரது வருகை பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.