வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ஒரு ‘கொலைகார பாசிஸ்ட்’ என்றும், அங்கு நடைபெறுவது ஒரு சட்டவிரோதமான பொம்மை ஆட்சி என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாகச் சாடியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய பிறகு முதல் முறையாக ஷேக் ஹசீனா வீடியோ மூலம் பொது மக்களிடையே உரையாற்றினார்.
அந்த வீடியோவில் ஷேக் ஹசீனா பேசியதாவது: “வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் முகமது யூனுஸின் ஆட்சி ஒரு சட்டவிரோத மற்றும் வன்முறை ஆட்சியாகும். அவர் ஒரு கொலைகார பாசிஸ்ட். அவரது ஆட்சியில் வங்கதேசம் இன்று பயங்கரவாதம் மற்றும் சட்டமின்மையின் பிடியில் சிக்கி, படுகுழியின் விளிம்பில் நிற்கிறது. ஜனநாயகம் முற்றிலும் முடக்கப்பட்டு, நாட்டை விட்டு நாடுகடத்தப்பட்டுள்ளது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை:
வெளிநாட்டு சக்திகளுக்குச் சேவை செய்யும் இந்த ‘பொம்மை ஆட்சியை’ மக்கள் ஒன்றிணைந்து தூக்கியெறிய வேண்டும். நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. நாட்டைத் துரோகிகளிடம் காட்டிக்கொடுப்பதன் மூலம், யூனுஸ் நமது அன்புக்குரிய தாய்நாட்டைப் பேரழிவை நோக்கித் தள்ளுகிறார். எனவே, தேசத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும்.”
இவ்வாறு ஷேக் ஹசீனா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வங்கதேசத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஷேக் ஹசீனாவின் இந்த அதிரடி வீடியோ உரை அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
