ஈரானில் 800 பேரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட தகவல் முற்றிலும் தவறானது என்று ஈரான் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக வெடித்ததில் ஏராளமானோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஈரானில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே, சமீபத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், “எனது தலையீடு காரணமாக ஈரான் அரசு 800 பேருக்கு விதிக்கப்படவிருந்த மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

டிரம்பின் இந்தக் கருத்தை ஈரான் நீதித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து ஈரான் தலைமை வழக்கறிஞர் கூறுகையில், “டிரம்ப் சொல்வது முற்றிலும் உண்மைக்கு மாறானது. 800 பேரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அப்படி ஒரு முடிவை ஈரான் நீதித்துறை எடுக்கவும் இல்லை. அமெரிக்க அதிபர் ஒரு பொய்யான தகவலைப் பரப்புகிறார்,” என்று தெரிவித்தார்.

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய பலர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் இது பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.