சேலம் மாவட்டத்தில் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3  வயது சிறுவனை, 43 நாட்கள் தீவிர சிகிச்சையுடன் காப்பாற்றிய சேலத்தின் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர்.

ஏற்காடு அருகே ஜெரினாக்காடு பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்பவரின் மகன் இளஷின் (வயது 3), கடந்த சில வாரங்களுக்கு முன், வீட்டில் கீர்த்தனா சமையல் செய்து கொண்டிருந்த போது அருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.

தவறுதலாக தடுமாறி கீழே விழுந்த நிலையில், அவர் மீது கொதிக்கும் எண்ணெய் விழுந்து, 50% தீக்காயம் ஏற்பட்டது. குழந்தையின் முகம் முழுவதும் வீக்கம், தோல் சுருக்கம் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

உடனடியாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆட்மிஷன் செய்யப்பட்ட இளஷின், தீவிர சிகிச்சைப் பிரிவில் 43 நாட்கள் போராடிய பிறகு, தற்போது முழுமையாக சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளார்.

இச்சம்பவம் மருத்துவர்களின் அனுபவமும், அர்ப்பணிப்பும் எவ்வளவு முக்கியமென்பதைத் துல்லியமாக காட்டுகிறது. சிறுவனின் வாழ்க்கையை மீட்ட மருத்துவ குழுவுக்கு, சமூக ஊடகங்கள் மூலமாகவும், கிராம மக்கள் மற்றும் குழந்தையின் உறவினர்கள் மூலமாகவும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் மழைபோல குவிந்து வருகின்றன.

இது போன்ற உயிர் காப்பாற்றும் சாதனைகள், மக்கள் நம்பிக்கையை மேலும் உயர்த்தும் வகையில் உள்ளதாகவும், சேலம் மருத்துவமனையின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.