ரஜினிகாந்த், விஜய் உட்பட பல நடிகர்களுடன் சேர்ந்து 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி (59). இவர் தற்போது சிறுநீரக நோயால் சிரமப்பட்டு வருகிறார். 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவுக்கு உதவிக் கரம் நீட்ட திரையுலகினர் முன் வர வேண்டும் என சக நடிகரான பெஞ்சமின், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து அவரது மருத்துவ செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் தனது மூத்த மகளின் கல்லூரி கல்வி செலவுக்கு வறுமையில் வழித்தேடி அலைந்த அவருக்கு சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் உதவியுள்ளார். கிட்னி பிரச்சனைக்காக மருத்துவமனையில் மணி சிகிச்சை பெற்றபோது அவரை நேரில் சென்று சந்தித்த ஐசரி கணேசன் அவரது மகளுக்கு அளித்த வாக்குறுதியை மறக்காமல் நினைவில் வைத்து உதவியுள்ளார்.