பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூர் மாதா கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 10- ஆம் தேதி பெரியம்மாள் போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருக்கும் ஜவுளிக்கடையில் சேலை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பழைய பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார்.

அப்போது கைக்குழந்தையை வைத்துக்கொண்டு சுடிதார் அணிந்து வந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பெங்களூரு செல்ல வேண்டும். எனது 5 பவுன் எடையுள்ள தங்க நாணயத்தை வைத்துக்கொண்டு 3000 ரூபாய் தாருங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பெரியம்மாள் பணம் இல்லை என கூறினார். அந்த பெண் இந்த தங்க நாணயங்களை வைத்துக்கொண்டு உங்கள் காதில் அணிந்திருக்கும் தோடு, மாட்டலை கழற்றி கொடுங்கள் என கூறினார்.

இதனை நம்பி பெரியம்மாள் 1 பவுன் தோடு மற்றும் மாட்டலை கழற்றி எடை போட்டு அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த நாணயங்கள் போலியான கவரிங் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெரியம்மாள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.