திருமண மேடை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கியமான, மகிழ்ச்சியான தருணம். ஆனால், அந்த மணக்கோலத்தில் நின்றுகொண்டே தன் மருத்துவக் கடமையைச் செய்து அசத்தியுள்ளார் ஒரு புதுப்பெண். திருமண விழாவில் மயங்கி விழுந்த பெண்களுக்கு மணமேடையில் இருந்தபடியே அவர் முதலுதவி செய்த நிகழ்வு தற்போது இணையத்தில் அனைவரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பனூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஷிரின் சுபைர். இவருக்கும் டாக்டர் ரிஜாசுக்கும் திருமணம் கோலாகலமாகத் திட்டமிடப்பட்டு, சடங்குகளும் விருந்து உபசரிப்புகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்த அந்த வேளையில், உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களுக்கு திடீரென எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதில் ஒரு பெண்ணின் மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வழியத் தொடங்கியது; மற்றொரு பெண்ணுக்குக் கடுமையான தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கிச் சரியும் நிலைக்குச் சென்றார்.
முதலில் மருத்துவர் பின்னர் தான் மணப்பெண்
மண பந்தலில் அமர்ந்த மருத்துவர் ஷிரின் வரவேற்பு நிகழ்ச்சியில்
உணவு பரிமாற கேட்டரிங் வேலைக்கு வந்த பெண்ணுக்கு
மூக்கில் இருந்து ரத்தம் வடிய அவர் செய்வது அறியாமல் சுற்றி இருந்தவர்கள் நிற்க pic.twitter.com/PWdQqmvIzt
— Rajini (@rajini198080) August 21, 2026
அங்கு நின்றிருந்த உறவினர்களுக்கு, மணப்பெண் ஷிரின் ஒரு மருத்துவர் என்பது தெரிந்திருந்ததால் உடனடியாக அவரிடம் சென்று விவரத்தைத் தெரிவித்தனர். சற்று யோசிக்காமல், மணக்கோலத்திலேயே ஓடிவந்த டாக்டர் ஷிரின், திருமண நிகழ்வுகளைச் சற்று ஒத்திவைத்துவிட்டுத் தனது மருத்துவக் கடமையைச் செய்யத் தொடங்கினார்.
மூக்கில் ரத்தம் வடிந்த பெண்ணைப் பார்த்த அவர், அவரை முன்னோக்கிச் சாய்ந்து அமரச் செய்து, மூக்கின் மென்மையான பகுதியைச் சரியாக அழுத்திப் பிடித்து ரத்தப்போக்கை உடனடியாக நிறுத்தினார். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அதனைத் தொடர்ந்து செய்யுமாறு அறிவுறுத்தினார். தலைசுற்றலால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணைப் படுக்க வைத்து, அவரது கால்களைச் சற்று உயரமாகத் தூக்கி வைக்கச் செய்து உடனடி முதலுதவி அளித்தார்.
பின்னர், அந்த இரு பெண்களையும் மேல் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று வருமாறு அன்புடன் அறிவுறுத்தினார். மணப்பெண்ணின் இந்த மனிதாபிமானச் செயலால் மீண்ட அந்த இரண்டு பெண்களும் கண்ணீர்மல்க அவருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சை மருத்துவத்தில்முதலாமாண்டு படித்து வரும் ஷிரின், தான் செய்த இந்தச் செயலை ஒரு பெரிய விஷயமாகக் கருதாமல், இது ஒரு எளிய மருத்துவக் கடமை மட்டுமே என ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும், அவரை மணந்து கொண்ட கணவர் டாக்டர் ரிஜாசும் எலும்பியல் மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது. தன் மகிழ்ச்சியான நாளிலும் மற்றவர்களின் உயிரைக் காக்க முன்வந்த டாக்டர் ஷிரினின் செயல் தற்போது பலரது பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.
