தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவுக்குள் நிலவி வரும் பல்வேறு உட்கட்சி குழப்பங்கள் காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வெங்கட்ராமன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தற்போது திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​வெங்கட்ராமனுடன் இணைந்து காஞ்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான தனசேகரன் மற்றும் ஜெயபிரதாப் ஆகியோரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.

சமீபகாலமாக அதிமுகவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அக்கட்சியினர் பலரும் டிவிகே மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் அடுத்தடுத்து இணைந்து வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சிகள் அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.