தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில், தங்களுக்கு ஆதரவளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட உள்ளதாகத் நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக அரசுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோர் நாளை அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவுள்ள சூழலில், தவெக விடுத்த அழைப்பை ஏற்று ஐயூஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்கச் சம்மதம் தெரிவித்துள்ளது.

கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள் தற்போதைய அமைச்சரவை பங்கேற்பை மறுத்துள்ள நிலையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலும், முஸ்லிம் லீக் இந்த ஆஃபரை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். ஷாஜஹான் அல்லது வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சையத் ஃபாரூக் பாஷா ஆகிய இருவரில் யார் அமைச்சர் என்பதை அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யம் கூடியுள்ளது.