அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜு நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய நிலையில், காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலம் மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு பிரபல முன்னணி நடிகை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் ஹோட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கி இருந்தபோது நடிகைகள் அழைத்துவரப்பட்டதாகவும், அதில் குறிப்பாக நடிகை திரிஷாவின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார் ராஜு.

அதாவது அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்து வெங்கடாசலம் கேட்டதன் பேரில் ரூபாய் 25 லட்சம் கொடுத்து திரிஷாவை கூவத்தூர் ஹோட்டலுக்கு நடிகர் கருணாஸ் அழைத்து வந்ததாகவும், மேலும் பெரும்பாலான நடிகைகள் அங்கு வந்தனர். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது என பரபரப்பை கிளப்பினார். இவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து இயக்குனர் சேரன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பக்கத்தில், அவர் நடிகர்களை தரக்குறைவாக பேசியதற்காக நடிகர் சங்கம் கண்டித்து அவர் மீது வழக்கு போட வேண்டும். suomoto நடவடிக்கை வேண்டும் என்று நடிகர் விஷால் மற்றும் கார்த்தியை டேக் செய்திருந்தார்.

மேலும் இந்த மலிவு மனப்பான்மை கொண்ட நபருக்கு ஏன் திமுகவை சேர்ந்த ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன? ஏன் அவரை நடிகைகள் மற்றும் பெண்களை பற்றி மலிவாக பேச அனுமதித்தார். ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் இப்படிப்பட்டவர்களை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?

அவர் இந்த மனநிலையுடன் சென்று பாஜகவில் இணைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அத்தகையவர்களை அவர்கள் வரவேற்பார்கள். NCW அமைதியாக இருக்கிறது, குஷ்புவும் அமைதியாக இருக்கிறார். ஒரு நடிகையாக நான் வருத்தப்படுகிறேன், இதுபோன்ற மோசமான கருத்துக்களை எதிர்கொள்ளும் எந்த நடிகையையும் நான் ஆதரிக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இதனிடையே நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பானது. தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது சட்டத் துறையிலிருந்துதான் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.