அரியானா மாநிலம் குருகிராமில், பிறந்து சில நாட்களேயான குழந்தையை வைத்துக்கொண்டு நள்ளிரவு 1:30 மணி வரை ஒரு பெண் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி, காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் மிகக் கடினமான சிஏ (Chartered Accountant) தேர்வை எழுதி பாஸான திறமையான பெண் தான் தனது மனைவி என்றும், தங்களுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ள நிலையிலும் அவரது மேலாளர் கொடுத்த கடுமையான ஒர்க் பிரஷர் காரணமாக நள்ளிரவு தாண்டியும் அவர் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் அந்த கணவர் வேதனையோடு பகிர்ந்துள்ளார்.

​தினமும் 12 முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடுமையான வேலைப்பளு மற்றும் மேலாளரின் டார்ச்சர் காரணமாக தனது மனைவி உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் முற்றிலும் சோர்வடைந்துவிட்டதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

திறமையான ஒரு பெண், தன் குழந்தையையும் கவனித்துக்கொண்டு வேலையையும் பேலன்ஸ் செய்ய முடியாமல் திணறும்போது, அதைப்புரிந்து கொள்ளாமல் கார்ப்பரேட் உலகம் அவளைக் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் என அவர் கேட்டுள்ள கேள்வி, தற்போதும் புதிய தாய்மார்கள் எதிர்கொள்ளும் பணிச்சூழல் குறித்த விவாதத்தை நெட்டிசன்கள் மத்தியில் தீவிரமாக்கியுள்ளது.