முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த விரதங்களில் ஒன்று மகா கந்தசஷ்டி விரதமாகும். அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்த முருகப்பெருமான், நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள், நோய்கள் மற்றும் கடன் பிரச்சினைகளை நீக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக, குழந்தை பாக்கியம் பெற நினைப்பவர்கள் இந்த விரதத்தை மிகக் கடுமையாகக் கடைபிடித்து நற்பலன்களைப் பெறுகிறார்கள்.

முருகப் பெருமான் அவதரித்தது வைகாசி விசாகம் என்றாலும், சஷ்டி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் அவருக்கு மிகவும் உகந்தவை ஆகும். ஒவ்வொரு மாதமும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சஷ்டியே ‘மகா கந்தசஷ்டி’ விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் தீராத வினைகளும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பொதுவாக கந்தசஷ்டி விரதம் என்பது 6 நாட்கள் அல்லது 7 நாட்கள் கடைபிடிக்கப்படும் ஒன்றாகும். ஆனால், பல பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 48 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள் என்றும் விரதம் மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு (2026) மகா கந்தசஷ்டி விழா நவம்பர் 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி, நவம்பர் 15-ஆம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவடைகிறது. மறுநாளான நவம்பர் 16 அன்று முருகன் – தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

நீண்ட நாட்கள் விரதம் இருக்க நினைப்பவர்கள் தங்களின் விரதத்தை எப்போது தொடங்க வேண்டும் என்ற விவரங்கள் இதோ: 48 நாட்கள் மண்டல விரதம் இருப்பவர்கள் செப்டம்பர் 29 செவ்வாய்க்கிழமையும், 21 நாட்கள் விரதம் இருப்பவர்கள் அக்டோபர் 26 திங்கள்கிழமையும் தங்களின் விரதத்தைத் தொடங்க வேண்டும். மேலும் 11 நாட்கள் விரதம் இருப்பவர்கள் நவம்பர் 5 வியாழக்கிழமை அன்று விரதத்தைத் தொடங்கலாம்.

வழக்கமான 6 நாள் விரதத்தை நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை தொடங்லாம். ஒரே ஒரு நாள் மட்டும் விரதம் இருக்க விரும்புபவர்கள் சூரசம்ஹார நாளான நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று விரதம் இருக்கலாம். குழந்தை வரம், திருமண பாக்கியம், கடன் நிவர்த்தி மற்றும் மன அமைதி பெற விரும்பும் அனைத்து பக்தர்களும் இந்தத் புனித நாட்களில் கந்தசஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானின் அருள் பெறலாம்.