மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள புகழ்பெற்ற மகாராஜா யஷ்வந்த்ராவ் (MYH) அரசு மருத்துவமனையில், ஒரு வயது சிறுவனின் உயிரைக் காக்க மருத்துவர்கள் நிகழ்த்திய சாதனை ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டில் உள்ள மீன் தொட்டியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, விளையாட்டாக 3 அங்குல நீளமுள்ள உயிருள்ள ‘கௌராமி’ மீனை அந்தச் சிறுவன் விழுங்கியுள்ளான். அந்த மீன் குழந்தையின் குரல்வளையில் சிக்கிக்கொண்டதால், மூச்சுவிட முடியாமலும் அழ முடியாமலும் அக்குழந்தையின் உடல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நீல நிறமாக மாறியுள்ளது.
ரத்தம் வழிந்தோடிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட அந்தச் சிறுவனுக்கு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்தது.
டாக்டர் யாமினி குப்தா தலைமையிலான நிபுணர் குழு, மிகுந்த சவால்களுக்கு இடையே இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. தொண்டைக்குள் சிக்கியிருந்த மீன் உயிருடன் துடித்துக் கொண்டிருந்ததால், அதன் செவுள்கள் மற்றும் துடுப்புகள் குழந்தையின் உணவுக்குழாயைக் கிழித்துவிடாதபடி மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியிருந்தது.
இறுதியாக, எண்டோஸ்கோபி முறையில் அந்த 3 அங்குல மீனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். அறுவை சிகிச்சை முடிந்தவுடன் குழந்தையின் சுவாசம் சீராகி, தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய இந்தியாவில் ஒரு பச்சிளம் குழந்தையின் தொண்டையில் உயிருள்ள மீன் சிக்கிய சம்பவம் இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
