உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ரவஸ்தி (Shravasti) மாவட்டத்தின் இகௌனா பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில், கடந்த எட்டு நாட்களாகப் பசு மாடு ஒன்று எவ்வித இடைவெளியுமின்றி தொடர்ந்து வட்டமடித்துக் (சுற்றிச் சுற்றி) கொண்டே இருந்த விநோதச் சம்பவத்தைக் கண்டு, அதற்குள் ஏதோ சாமி இறங்கிவிட்டதாக நினைத்துப் பயபக்தியுடன் மக்கள் அதற்குப் பூசை செய்து, அன்னதானம் (பண்டாரா) வழங்கிய அஜப்-கஜப் (விசித்திர) விவகாரம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களைச் சிரிக்க வைத்து அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பஸ்பரியா புரைனா கிராமத்தைச் சேர்ந்த சோனு மிஸ்திரி என்பவரது வயலில் ஒரு ஆதரவற்ற பசு மாடு கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரவும் பகலும் ஒரே இடத்தில் வட்டமடித்துக் கொண்டே இருந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள், குறிப்பாகப் பெண்கள், இது சாக்சாத் தெய்வத்தின் அற்புதம் மற்றும் அருள் என்று நம்பி, மாட்டின் காலில் விழுந்து கும்பிட்டது மட்டுமன்றி, தூரத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்களை வரவழைத்துப் பசு மாட்டோடு சேர்ந்து அவர்களும் அந்த வயலைச் சுற்றி வந்துள்ளனர்.

இந்த விசித்திர விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் காதுகளுக்கு எட்டவே, வட்டாட்சியர் முன்னிலையில் முதன்மைப் கால்நடை மருத்துவ அதிகாரி டாக்டர் சுனில் சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்து வந்து பசு மாட்டைப் பரிசோதித்தனர். அப்போது, அந்த மாட்டுக்கு எந்தச் சாமியும் வரவில்லை என்றும், அதற்கு ‘சர்ரா’ (Sarra / Hypoglycemia) எனப்படும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் ஒருவித நரம்பியல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தான் அது ஒரே இடத்தில் வட்டமடிக்கிறது என்ற உண்மையை உடைத்தனர்.

டாக்டர்கள் அந்தப் பசுவை கயிற்றால் கட்டிப்போட்டு, குளுக்கோஸ் ட்ரிப்ஸ் மற்றும் ஊசிகளைப் போட்டவுடன் அந்த மாடு அமைதியாக அமர்ந்தது. ஆனால், அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிய அடுத்த கணமே, மக்கள் அந்த மாட்டை மீண்டும் அவிழ்த்து விடவே, அது மறுபடியும் வயலைச் சுற்றி வரத் தொடங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதமும் இதேபோல் பிஜ்னோர் பகுதியில் நாய் ஒன்று அனுமன் கோயிலை வினோதமாகச் சுற்றி வந்தபோது, மக்கள் அதை பைரவரின் அவதாரம் என்று கும்பிட்ட சம்பவத்தையும் நெட்டிசன்கள் தற்பொழுது இந்தச் சம்பவத்துடன் ஒப்பிட்டுச் சோசியல் மீடியாவில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.