குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் தலைவர் கலைஞர் அவர்களின் கனவு நனவாகியுள்ளது என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்..

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதோடு திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இந்நிலையில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் தலைவர் கலைஞர் அவர்களின் கனவு நனவாகியுள்ளது என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

தொடர் கடிதங்கள், நாடாளுமன்றத்தில் கோரிக்கை, துறைசார் அமைச்சர்கள் – அதிகாரிகள் சந்திப்பு என பத்து ஆண்டுகால நம் விடாமுயற்சியால் இன்று அடிக்கல் நாட்டப்படும் இத்திட்டம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும் என அவர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள வீடியோவில்,  2013 ஆகஸ்ட் – நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்கக்கோரி தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார். 2013 ஆகஸ்ட் – தலைவர் கலைஞர் அவர்களின் கடிதத்தை குறிப்பிட்டு ஏவுதளம் வேண்டுமென மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தேன்.

2014 ஜூலை – பாஜக ஆட்சி அமைத்து முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏவுதளம் வேண்டுமென வலியுறுத்தினேன். 2014 டிசம்பர் மீண்டும் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தேன். 2018 செப்டம்பர் – குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.

2019 ஏப்ரல் – நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அளித்தேன். 2019 நவம்பர் – மக்களவையில் மீண்டும் கோரிக்கை வைத்தேன். 2023 ஆகஸ்ட் – ஒன்றிய அரசு ஏவுதளம் அமைத்திட ஒப்புதல் வழங்கியது. 2024 பிப்ரவரி – குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பெரும் பங்காக இருக்கப் போகும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்திற்கு அடித்தளமிட்ட தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.