
சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏசி மெக்கானிக்கல் வேலை பார்க்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். கர்ப்பமாக இருந்த ராதிகாவுக்கு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. 8 மாத குறை பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தை ஒரு கிலோ 400 கிராம் எடையுடன் மஞ்சள் காமாலை நோயுடன் பிறந்தது. அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை கண்ணாடியை கைகளால் அடித்து உடைத்தார். அந்த கண்ணாடி அவரது கையை கிழித்து ரத்தம் வடிந்தது. இதனால் படுகாயமடைந்து யுவராஜ் கீழே விழுந்தார். அவரை அதே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.