சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மா, குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்து உலகளாவிய பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.

இவரது இந்த உன்னதமான செயலை அங்கீகரிக்கும் விதமாக, மலேசிய அரசின் சட்டத்துறை அமைச்சர் குலசேகரன் தனது உதவியாளர் மூலம் பத்மாவிற்கு தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார்.

மேலும், வீடியோ கால் மூலம் பத்மாவிடம் பேசி தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கிப் பாராட்டிய நிலையில், தற்போது கடல் கடந்தும் பத்மாவிற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திரைத்துறை பிரபலங்களான ரஜினிகாந்த் பத்மாவிற்கு தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டியதோடு, நடிகர் பார்த்திபன் பத்மாவை எத்திராஜ் கல்லூரிக்கு அழைத்துச் சென்று அவருக்குப் பாத பூஜை செய்து, ‘உலக அழகி’ என மகுடம் சூட்டி கௌரவித்தார்.

அஞ்சல் துறை இவரது உருவம் பதித்த அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. 45 சவரன் நகையின் மதிப்பு தெரிந்தும், அதை ஒரு நொடியில் காவல்துறையிடம் ஒப்படைத்த பத்மாவின் நேர்மை, மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகுக்கு பறைசாற்றியுள்ளது.