தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறும் பணியை இன்று உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே மக்கள் கடலாகக் காட்சியளித்தது.

சுமார் 8 பக்கங்கள் கொண்ட இந்த விரிவான விண்ணப்பப் படிவத்தில், விண்ணப்பதாரரின் சுயவிவரங்கள், கல்வித் தகுதி, மொழித்திறன் மற்றும் தொகுதி குறித்த அடிப்படைத் தகவல்கள் எனப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை மற்றும் அந்தத் தொகுதியில் தங்களுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்புகள் குறித்து வேட்பாளர்கள் விளக்கமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில், கட்சியின் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்றுள்ளீர்களா? என்ற வினா சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு மிகக் குறுகிய காலமே ஆவதால், இதுவரை அக்கட்சி சிறை செல்லும் அளவிலான பெரிய போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என திமுக மற்றும் அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் தற்காலிகமாகக் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், எவ்விதப் போராட்ட வரலாறும் இல்லாத நிலையில் இக்கேள்வி தேவையற்றது என ட்ரோல் செய்து வருகின்றனர்.

மறுபுறம், கட்சித் தலைமையகத்தில் திரண்ட கூட்டத்தால் பனையூர் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொண்டர்களின் வாகன நெரிசல் மற்றும் கூச்சல் குழப்பத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப்ரவரி 14-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ள நிலையில், மாநில நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். மற்ற அரசியல் கட்சிகளின் விருப்ப மனுக்கள் ஒரு சில பக்கங்களோடு முடிந்துவிடும் நிலையில், தவெகவின் இந்த நீண்ட வினாத்தாள் அக்கட்சியின் தீவிரமான வேட்பாளர் தேர்வைக் காட்டுவதாக அதன் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.