உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் சுசுவாஹி (Susuwahi) பகுதியில், குடித்துவிட்டு வந்து தாயுடன் சண்டையிட்ட தந்தையை 12 வயது சிறுவன் ஒருவன் ஆக்ரோஷமாகத் தாக்கி சாக்கடையில் தள்ளிவிட்ட அதிர்ச்சி வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், மதுபோதையில் வந்து வழக்கம்போலத் தனது தாயிடம் வம்பிழுத்து அராஜகம் செய்த தந்தையைப் பார்த்து அந்தச் சிறுவன் பொறுமையிழந்துள்ளார்.

அளவுக்கு மீறிய கோபத்தால் நிலைதடுமாறிய அந்த 12 வயது சிறுவன், தனது தந்தையைத் தள்ளிவிட்டு, அவரது நெஞ்சிலேயே மிதித்துச் சரமாரியாக அடித்துத் துவைத்து, இறுதியில் அவரை அங்கிருந்த சாக்கடைக்குள்ளேயே தள்ளிவிட்டு ஓடியுள்ளான். மதுப்பழக்கம் என்பது தனிமனிதனை மாத்திரமல்லாமல், ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தையும், உறவுகளையும் எப்படிச் சீரழித்து வீதிக்குக் கொண்டுவருகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு வலிமிகுந்த சான்றாக மாறியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் வேளையில், சிறுவனின் இந்த அதிரடி ஆக்ரோஷமான செயல் ஒரு தற்காலிகத் தீர்வாகத் தெரிந்தாலும், இது அவனது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். “தந்தை தொடர்ந்து கொடுத்து வந்த குடும்ப வன்முறையாலும் கொடுமைகளாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்தச் சிறுவன் இப்படி வன்முறையில் இறங்கியிருந்தாலும், தந்தையைத் தானே தாக்கிய இந்த ஒரு கொடூரமான தாக்கம் மற்றும் குற்ற உணர்ச்சி அவனது வாழ்க்கை முழுக்க நிழலாகத் துரத்திக்கொண்டே இருக்கும்” என்று நெட்டிசன்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, உடனடியாக அரசு மற்றும் குழந்தைகள் நல அமைப்பு தலையிட்டு, அந்தச் சிறுவனை மீட்டு அவனுக்கு முறையான மனநல ஆலோசனைகளை (Psychological Counseling) வழங்க வேண்டும் என்றும், அவனது மனநிலையைச் சீரமைத்து மற்ற குழந்தைகளைப் போல அவன் ஒரு சாதாரண, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளவாசிகள் தங்களது கோரிக்கைகளை வலுவாக முன்வைத்து வருகின்றனர்.