இந்தியாவில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை வருவதால் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி ஜனவரி 25-ஆம் தேதி தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜனவரி 25-ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

இதேப் போன்று மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 29-ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி ஜனவரி 26-ஆம் தேதி இரவு 9 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

அதன் பிறகு மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 27-ம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு பயணச்சீட்டு ஜனவரி 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.