சமீபத்திய டி-20 உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ள நிலையில், கனடா கிரிக்கெட் வாரியம் குறித்த அதிரவைக்கும் குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு சர்வதேச செய்தி நிறுவனத்தின் தகவல்படி, கனடா கிரிக்கெட் வாரியத்திற்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் சில நிழல் உலகக் கும்பல்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்த கிரிக்கெட் வாரியத்தின் பணம் முறைகேடான வழிகளில் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதச் செயல்பாடுகளுக்கும், வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தானி அமைப்புகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐஎஸ்ஐ ஆதரவுடன் சிலர் இந்த வாரியத்தின் தலைவர் பதவியைப் பிடித்ததன் மூலம், கிரிக்கெட் வாரியத்தின் நிதி சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வழங்கும் நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், பாகிஸ்தானில் இருந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்டு வருவதில் ஊழல் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளில் மோசடி செய்தல் போன்ற பல புகார்கள் இந்த நிர்வாகத்தின் மீது அடுக்கப்பட்டுள்ளன.
இந்த பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த சில முக்கியக் குற்றவாளிகள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய நிர்வாகக் குளறுபடிகளுக்கு மத்தியில், இந்தாண்டு டி-20 உலகக் கோப்பையில் விளையாடிய கனடா அணி, லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய வலிமையான அணிகளுக்கு எதிராக விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் மிக மோசமான தோல்விகளைத் தழுவி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
