தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, நமக்கு நாமே திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்நிலையில் தமிழக முழுவதும் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை குறித்து அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 100 நாள் வேலை திட்டம்,அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள், அவற்றின் முன்னேற்றம், பிளாஸ்டிக் தடை செய்தல்,பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதித்தல் மற்றும் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.